Raj Siva
July 30, 2019 ·
என்ன... புரிகிறதா? 01
-ராஜ்சிவா(ங்க்)
பிக்பாங் கணத்தின்போது, இப்போதுள்ள ஒட்டுமொத்தப் பிரமாண்டப் பேரண்டத்துக்குக் காரணமான, அந்த ஒற்றைப் புள்ளி பெருவிரிவாய் விரியக் காத்திருந்தது. அந்தக் கணப்பொழுதில், நேரமென்ற (காலம்) ஒன்றோ, இடமென்ற (வெளி) ஒன்றோ இருக்கவில்லை. சொல்லப்போனால், அந்தச் சொற்களுக்கே அங்கு அர்த்தம் இல்லை. அவற்றிற்கு மட்டுமில்லை. எவற்றிற்கும் அர்த்தமில்லை. ‘இல்லாமையின் கணத்தில் இருத்தலுக்கு அர்த்தங்கள் கிடையாது’. உதாரணமாக, நீங்கள் பார்த்தே இருக்காத ஒரு நிறத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா என்று பாருங்கள். சரி போகட்டும். இப்போ அது இல்லை பிரச்சனை.
பிக்பாங் கணத்தில் அந்த ஒருமைப் புள்ளி மிகச்சிறியதாக இருந்தது என்று பலர் சொல்வார்கள். இப்போதும் சொல்கிறார்கள். அதிகம் ஏன், நானே பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். சிலர் ஒருபடி மேலே போய், அது சிறிய பந்தைப் போலென்றும், ஊசி முனை போன்றது என்றும் சொல்வார்கள். எல்லாமே தப்பு. மகாத்தப்பு.
அந்தக் கணத்தில், எப்படிக் காலம் மற்றும் இடத்திற்கு அர்த்தம் இல்லையோ, அதுபோலப் பருமன் என்பதற்கும் அர்த்தம் கிடையாது. சிறியது,பெரியது என்ற சொற்களுக்கு அங்கே இடமேயில்லை. அந்தப் புள்ளி எதைவிடவும் சிறியதும் இல்லை. எதையும்விடப் பெரியதும் இல்லை. எதையும் எதனுடனும் ஒப்பிடவே முடியாத, மனிதனால் கற்பனை செய்ய முடியாத அற்புதப் புள்ளி அது. பருமனற்ற, உருவமற்ற ஏதோவொன்று. அது இப்பிடி இருக்குமென்று சிந்தித்தால் குழம்பிப் போய்விடுவீர்கள். இனி யாரும் அதைச் சிறியதொரு புள்ளி என்று சொன்னால், அப்படியே விட்டுவிடுங்கள். ஆனாலும், அதை ஒருமைப்புள்ளியென்றே அழைத்தும் கொள்கிறோம். பரிமாணமே இல்லாத ஒருநிலை என்பதால்.
இதைத் தாண்டியும் அந்தப் புள்ளியின் பருமனை விளக்க வேண்டுமென்று யாரும் கேட்டால், “கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 14:53 மணியின் அளவு பெரிதாக இருந்தது என்று சொல்லிவிடுங்கள்.
என்ன புரிகிறதா?
-ராஜ்சிவா(ங்க்)
#enna_purikiratha
#என்ன_புரிகிறதா
#rajsiva
#ராஜ்சிவா
Raj Siva
என்ன... புரிகிறதா? 02-ராஜ்சிவா(ங்க்)
நாம் இப்போது, பி.பி 13.8பி இல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதாவது, பிக்பாங்கின் பின் 13.8 பில்லியன் வருடங்களை இதுவரை கடந்திருக்கிறோம். இந்தக் காலக் கணக்கு, பேரண்டத்தின் அனைத்து இடங்களுக்கும் பொதுவானது. வருடம் என்னும் அலகு பூமி சார்ந்ததாக இருந்தாலும், அந்தக் கால இடைவெளியின் அளவீட்டைப் பேரண்டம் முழுவதுமுள்ள இடங்களில் பொருத்திப் பார்க்கையில், பேரண்டம் உருவானது 13.8 பில்லியன் பூமி வருடங்கள். பால்வெளி உடுத்திரள் ஆனாலென்ன, ஐம்பது மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பாலிருக்கும் M87 உடுத்திரள் ஆனாலென்ன, இரண்டு இடத்திலுமே இந்தக் கணத்தில், பேரண்டம் உருவாகி 13.8 பில்லியன் வருடங்கள்தான். சரி, நான் இப்போது ஒன்று சொல்லப் போகிறேன். அதுபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அதற்கான பதிலும், விளக்கமும் என்னிடமில்லை. உங்களைக் குழப்பிவிடுவதற்காகவும், பேரண்டத்தின் புரிந்துகொள்ள முடியாத பேராச்சரியங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் மட்டுமே இதை எழுதுகிறேன்.
சரி, இப்போது விசயத்துக்குள் போகலாமா? பிக்பாங் பெருவிரிவு நடந்த சில மில்லியன் வருடங்களின் பின்னர் முதல் நட்சத்திரங்களும், நட்சத்திரக் கூட்டங்களும் உருவாக ஆரம்பித்தன. ஈர்ப்புவிசையின் அழுத்தம் மற்றும் பிசகல் காரணமாக அனைத்துவிதமான விண்வெளிப் பொருட்களும் தோன்ற ஆரம்பித்தன. அதில் நட்சத்திரங்கள், கோள்கள், நெபுலாக்கள், கருங்குழிகள், குவேசார்கள் என எல்லாமே அடக்கம். பெருவிருவின் பின் 690 மில்லியன் வருடத்தில் தோன்றிய குவேசாரைக் கண்டுபிடித்திருக்கிறோம். இந்தச் சமயத்தில் தோன்றிய ஒரு கருங்குழியை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இண்டார்ஸ்டெல்லார் படத்தில், கூப்பர் வந்திறங்கிய நீர்க் கோளமான ‘Gargantua‘ இல் காலம் மெதுவாகிறது என்று குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். Gargantua கோளின் ஒரு மணி நேரம், பூமியின் ஏழு வருடங்களுக்குச் சமமானது என்று சொல்லப்பட்டிருக்கும். அதுபோன்று, பெருவிரிவின் ஆரம்ப காலங்களில் தோன்றிய
கருங்குழியொன்றின் நிகழ்வெல்லைக்கு அருகே அல்லது நிகழ்வெல்லையிலேயே, ஒரு கோள் இருந்து, அதில் உயிரினம் வாழ்ந்தால், அவர்களுக்கான நேரம் பூச்சியத்துக்கு அருகிலேயே இருக்கும் அல்லவா? கருங்குழியின் மிகை ஈர்ப்புவிசையில், காலம் மெதுவாகி மெதுவாகிப் பூச்சியத்தை அண்மிக்குமென்று பல தடவைகள் சொல்லியிருக்கிறேன்.
அப்படியெனில், அந்தக் கோளில் வாழும் உயிரினத்திற்கு, காலம் நகராததால், பேரண்டம் உருவாகி 13.8 பில்லியன் வருடங்கள் ஆகியிருக்காது. வெறும் 700 மில்லியன் வருடங்களாக மட்டுமே இருக்கும். அதாவது, பேரண்டம் எங்கும் அது தோன்றி 13.8 பில்லியன் வருடங்கள் ஆகியிருக்கும்போது, அங்கு மட்டும் 700 மில்லியன் வருடங்கள் மட்டுமே ஆகியிருக்கும்.
என்ன புரிகிறதா?
-ராஜ்சிவா(ங்)
Raj Siva
August 3, 2019 ·
என்ன... புரிகிறதா? 03
-ராஜ்சிவா(ங்க்)
பலருக்கு இந்தக் குழப்பம் இருக்கிறது. சாதாரணமானவர்களுக்கு மட்டுமில்லை, இயற்பியல் தெரிந்தவர்களுக்கும் இருக்கிறது.
மிகவும் ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கிகள் மூலமாக இறந்த காலத்தை நாம் பார்க்கிறோமல்லவா? “பிக்பாங் நடைபெற்று சில மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய காலக்ஸியைக் கண்டுபிடித்திருக்கிறோம்” என்றும், “பிக்பாங்கின் பின், 590 மில்லியன் ஆண்டுகளில் உருவான குவேசாரைக் கண்டுபிடித்திருக்கிறோம்” என்றும், செய்திகளை நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம். அதாவது, 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை, இப்போதுள்ள நவீனத் தொலைநோக்கிகளால் பார்க்கிறோம். இந்த இடத்தில், பலருக்குச் சில கேள்விகள் எழுகின்றன. அதனால், மிகவும் குழம்பிப் போகிறார்கள்.

“இறந்தகாலத்தை தொலைநோக்கிகள் மூலம் நம்மால் பார்க்க முடியுமென்றால், பிக்பாங் என்னும் பெருவிரிவுக்குக் காரணமான ஒருமைப்புள்ளி (singularity) இருந்த இடம் எது என்பதையும் நம்மால் கணிக்க முடியுமல்லவா? அந்தப் புள்ளிக்கும், பூமிக்கும் உள்ள இடைவெளித் தூரம் எவ்வளவு?” என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. மிகமுக்கியமான, நுண்ணிய அர்த்தமுள்ள கேள்வி இது. இதைத் தமிழில் எப்படிப் புரிய வைப்பது என்பதுதான், இப்போது எனக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால். பார்க்கலாம்.
பிக்பாங் நடைபெற்றது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன். ஆகவே, 13.8 பில்லியன் ஆண்டுகள் தூரத்தில் பிக்பாங்கின் ஒருமைப்புள்ளி இருந்திருக்க வேண்டுமென்று சிலர் புரிந்து கொள்கிறார்கள். அது மிகவும் தப்பான புரிதல். ஒளியாண்டு என்னும் தூர அளவை மனதில் கொண்டு, இப்படித் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஒளியாண்டு என்பதில், ‘ஆண்டு’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல் இருந்தாலும், அது தூரத்திற்கான ஒரு அளவீடு. அதாவது, ஒரு ஆண்டில், ஒளி செல்லக்கூடிய தூரம் எவ்வளவோ, அவ்வளவு தூர இடைவெளியின் அலகு அது. ஆனால், பிக்பாங் நடைபெற்று 13.8 பில்லியன் ஆண்டுகள் என்று சொல்வது, அதன் காலத்தைக் குறிப்பது. இரண்டும் வேறு வேறு. இப்போது நீங்கள், “13,8 பில்லியன் ஆண்டுகள் தூரத்திலிருந்து ஒளி நம்மை வந்து சேர்வதற்கு, 13.8 பில்லியன் ஒளியாண்டுகள்தானே ஆகியிருக்கும். அப்படியெனில், அந்தப்புள்ளி 13.8 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில்தானே இருக்க வேண்டும்?” என்று என்னிடம் கேட்கலாம். இது மிகச்சரியானதொரு கேள்விதான். ஒளியாண்டு என்பதை நீங்கள் தெளிவாகவே புரிந்திருக்கிறீர்கள். ஆனால், பிக்பாங் பற்றித்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
பிக்பாங் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமா? கொஞ்சம் உன்னிப்போடு கவனியுங்கள். ஒரு சிறிய புள்ளி திடீரென பெரிதாய், மாபெரும் விரிவாய், பேரண்டமாய் விரிந்தது என்று சொல்கிறார்களல்லவா? அதற்கு எடுத்த நேரம் எவ்வளவு தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். 10^-32 வினாடியில் அது நடந்துவிட்டது. அதாவது, ஒரு வினாடியின் ட்ரில்லியன் ட்ரில்லியன் ட்ரில்லியனில் ஒரு பங்கு நேரத்தில் பேரண்டமாய் விரிந்துவிட்டது. முதல் மூன்று நிமிடத்திற்குள் ஒட்டுமொத்த அண்டத்திற்குமான அணுக்கருப் பிணைப்புகளும் நடந்து முடிந்துவிட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மனிதனால் கற்பனையே செய்ய முடியாத அவசர விரிவு அது. மைக்ரோ வினாடி, நானோ வினாடி என்பவையெல்லாம் அங்கு பெரிய அளவீடுகள். சரி, பேரண்டம் எப்படி விரிந்தது என்பதைப் பார்ப்போமா?
மூன்று மில்லிமீட்டர் ஆரம் கொண்ட பல்லியின் முட்டை ஒன்றை உங்கள் மனதில் எடுத்துக் கொள்ளுங்கள். மிகச்சிறிய கோள வடிவிலான முட்டை. அதற்குள் எதுவும் இல்லை. வெறும் கோது மட்டுமே. அந்தப் பல்லி முட்டையின் உட்புற ஓட்டில் நூறுக்கும் அதிகமான புள்ளிகளை இடுங்கள். சும்மா கற்பனையாகத்தான். இட்டாச்சா? சரி, உங்களுக்கு இப்போது அவெஞ்சர்ஸில் வரும் ‘தானோஸ்’ போன்று ஒரு அற்புத சக்தி தரப்படுகிறது. நீங்கள் விரல்களைச் சொடுக்கினால், அந்தக் கணத்தில், இந்தச் சிறிய பல்லியின் முட்டைக் கோது, நூறு மீட்டர் ஆரமுடைய மிகப்பெரிய முட்டையாக மாறிவிடும். இதுவும் கற்பனைதான். ம்ம்ம்ம்... விரல்களைச் சொடக்குங்கள்!
முட்டை இப்போது பெரிதாகிவிட்டது. சிறிய பல்லி முட்டையின் உட்புறத்தில் நீங்கள் இட்ட அந்த நூறுக்கும் அதிகமான புள்ளிகள் இப்போது எங்கு இருக்கும்? பெரியதாகிவிட்ட முட்டைக் கோதில் உட்புறச் சுவரில் பரவலாக இருக்குமல்லவா? அந்தச் சிறிய பல்லி முட்டைதான் பிக்பாங் ஒருமைப்புள்ளி. இப்போதுள்ள பெரிய முட்டைதான் விரிந்துவிட்ட பேரண்டம். அதில் இடப்பட்ட புள்ளிகள்தான் நடசத்திரங்களும், பூமிபோன்ற கோள்களும்.
சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். பெரிய முட்டைக் கோதினில் இருக்கும் புள்ளிகள் அனைத்தும், பேரண்டம் முழுவதும் பரவியிருக்கும் நட்சத்திரங்கள், கோள்களென எடுத்துக் கொண்டால், அவைக்கும் பிக்பாங் ஒருமைப்புள்ளி என்று சொல்லும் சிறிய முட்டைக்குமான தூரம் என்னவென்பதே இப்போதுள்ள கேள்வி. அதாவது இந்தக் கட்டுரையின் ஆரம்பக் கேள்வி.
சின்ன முட்டை 3 மில்லிமீட்டர். பெரிய முட்டை 100 மீட்டர் இரண்டுக்கும் உள்ள இடைவெளிதான், அந்தக் கேள்விக்கான பதில் என்று உங்கள் மனம் சொல்லும். அதாவது, கிட்டத்தட்ட 100 மீட்டர்கள் இடைவெளி இருப்பதாகத் தெரியும். அதுபோலவே, பூமிக்கும், ஒருமைப்புள்ளிக்கும் இடையிலுள்ள தூரத்தையும் கணிக்க வேண்டுமென்று மனம் சொல்லும். ஆனால், அது ரொம்பத் தப்பான கணிப்பு. இங்கு நீங்கள் தவறவிட்ட சில விசயங்கள் இருக்கின்றன. அவற்றைச் சொல்கிறேன். அப்போது, என்ன தப்பு என்பது புரியும். கவனியுங்கள்.
சிறிய பல்லியின் முட்டையில் நீங்களிட்ட ஒரேயொரு புள்ளியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பல்லி முட்டையின் கோதில் ஏதோவொரு இடத்தில் இருக்கிறது அல்லவா? இப்போது முட்டை பெரிதாகிறது. அந்தப் புள்ளி, தான் இருந்த இடத்தைவிட்டு நகர்ந்ததா? இல்லை. அது, தான் இருந்த இடத்தைவிட்டு நகரவேயில்லை. அது ஒரே இடத்தில்தான் இருந்தது. ஆனால், அது இருந்த இடத்தின் வெளி திடீரெனப் பெரிதாகியது. பெரிதாகியும் அது தானிருந்த இடத்திலேயேதான் இருக்கிறது. சிறிதுகூட தன்னுடைய இடத்தைவிட்டு அது நகரவேயில்லை. அங்கு விரிந்ததெல்லாம், அந்தப் புள்ளியிருந்த வெளி மட்டும்தான் (space). பல்லி முட்டையில் இடப்பட்ட நூறு புள்ளிகளுக்கும் இதுவே நடந்தது. அதில் இருந்த எந்தப் புள்ளியும் தன்னுடைய இடத்தைவிட்டு நகரவேயில்லை. அவை இருந்த மொத்த ஸ்பேஸும் திடீரென விரிந்தது. அவ்வளவுதான். விரிந்ததன் பின்னரும், அவை அனைத்தும், தாங்கள் முதலில் இருந்த அதே இடத்திலேயே இப்போதும் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு புள்ளி இருக்கும் இடமும் பிக்பாங்கின் ஆரம்பக் கணம் நடந்த அதே இடம்தான். எந்த இடத்தில் பிக்பாங் நடந்ததோ, அந்த இடமே இந்தப் பேரண்டமாக உருவாகியிருக்கிறது. பேரண்டம் முழுவதும் உள்ள அனைத்துப் புள்ளிகளும் பிக்பாங் இடத்தில் இருந்தன. இப்போதும் அதே இடத்தில்தான் இருக்கின்றன. பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பிக்பாங் நடந்தது. அந்த ஒவ்வொரு இடமும், வெளியின் விரிவால், வெவ்வேறு இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. நான் சொல்வது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். அப்படியும் புரியவில்லையென்றால், இன்னுமொரு உதாரணமும் சொல்கிறேன்.
ஒரு வட்டவடிவமான கிரிக்கெட் மைதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மைதானத்தின் தரை சிறப்பானதொரு கடினமான இரப்பரினால் செய்யப்பட்டது. மைதானம் மொத்தமும் அந்த இரப்பர் தரையிலானது. அந்தத் தரையை உங்களால் திடீரென 5 மீட்டர் ஆரமுள்ள வட்டத் தரையாகச் சுருக்கவும் முடியும். மைதானமளவுக்குப் பெரிதாக விரியச் செய்யவும் முடியும். ஒரு சுவிட்சை அழுத்தினால், அது சிறியதாகச் சுருங்கும். மறுமுறை அழுத்தினால் மைதானமளவு பெரிதாகிவிடும். இப்போது, அந்த இரப்பர் தரை 5 மீட்டர் அளவில் சிறிதாகச் சுருங்கியிருக்கிறது. அதில், நூறு சிறுவர்களை நெருக்கமாக நிற்க வையுங்கள். இப்போது, நீங்கள் சுவிட்சை அழுத்துங்கள். இரப்பர் தரை, மைதானமளவுக்குப் பெரிதாகிவிடுகிறது. அதனால், அந்தச் சிறுவர்கள் அனைவரும் மைதானமெங்கும் பரவி நிற்பார்கள்.


இப்போது அந்த ஒவ்வொரு சிறுவனிடமும் சென்று ‘நீயாக இங்குவரை நகர்ந்தாயா?” என்று கேட்டால், “இல்லை, நான் இருந்த இடத்தில்தான் இருக்கிறேன். எங்கும் நகரவில்லை” என்பார்கள். ஒவ்வொருவரும் இதையே சொல்வார்கள். அப்படியெனில், அந்த விரிவு நடந்தது சிறுவர்களிடத்திலில்லை. அவர்கள் நின்றிருந்த வெளியில்தான். அந்த விரிவு எந்தப் புள்ளியில் நடந்தது? சிறுவர்கள் இப்போது எங்கெங்கு நின்று கொண்டிருக்கிறார்களோ அந்த ஒவ்வொரு புள்ளியிலும் நடந்தது.எனவே, நம் பூமி இப்போது இருக்கும் புள்ளி (இடம்), பேரண்ட வெடிப்பு நடந்த அதே இடம்தான். முதல் கணத்தில் அது எங்கிருந்ததோ, அதே இடத்தில்தான் இப்போதும் இருக்கிறது. அதனால், பிக்பாங் வெடிப்பிற்கும், பூமிக்குமான இடைத்தூரம், வெறும் பூச்சியம்தான். இது பூமிக்கு மட்டுமல்ல, அண்டத்தின் ஒவ்வொரு நட்சத்திரமும், கோளும் இருக்குமிடமும், பேரண்ட விரிவு நடந்த இடம்தான். இங்கு நகர்ந்தவை நட்சத்திரங்களும், கோள்களும் அல்ல. வெளிதான் வெளியே விரிந்தது.
என்ன... புரிகிறதா?
-ராஜ்சிவா(ங்க்)
என்ன... புரிகிறதா? 04
-ராஜ்சிவா(ங்க்)
கடந்த பகுதியில், பிக்பாங் நடைபெற்ற கணத்தில், ‘பேரண்டத்தின் அனைத்துப் புள்ளிகளும் அங்கேயே இருந்தன’ என்று நான் சொல்லியிருந்ததைப் பலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அல்லது அவர்களுக்குப் புரியும்படி நான் சொல்லவில்லை. “பேரண்டம் உருவாகியது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரென்றால், சூரியனும், பூமியும் தோன்றியது மிகச் சமீபத்தில். அப்படியிருக்கும்போது, சூரியனும், பூமியும் பிக்பாங் நடந்த இடத்தில் எப்படி இருந்திருக்க முடியும்?” என்று சிலர் கேட்டிருந்தனர்.
பேரண்டத்தின் பிரமாண்டத்தைச் சிறிய பல்லி முட்டையொன்றினாலும், அதில் இடப்பட்ட நூறு புள்ளிகளினாலும் முழுமையாகப் புரியவைக்க முடியாது. ஓரளவுக்கு அதன் அடிப்படையைப் புரிந்து கொள்வதற்காகச் சொல்லப்பட்ட உதாரணங்கள் அவை. பிக்பாங் கணத்தில் உருவான பேரண்டத்துடன் ஒப்பிடுகையில், சூரியனெல்லாம் எதுவுமேயில்லை. உடுத்திரள்கள்கூட (காலக்ஸிகள்) ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், உடுத்திரள்களை இப்போது கணக்கில் எடுத்துக் கொள்வோம். உடுத்திரள்களின் தற்போது இருக்கும் அனைத்துப் பரப்பளவுகளும், பிக்பாங் கணத்தில், சிறு புள்ளிகளாய்ச் சுருங்கி இருந்தன. பிக்பாங் கணத்திலிருந்த ஒவ்வொரு புள்ளியும், இன்றுள்ள உடுத்திரள்களின் இடங்களாக விரிவடைந்திருக்கின்றன. அப்படியான ஒரு பால்வெளி உடுத்திரளின் பரப்பளவில் சூரியக் குடும்பம் சமீபத்தில் தோன்றியிருக்கிறது.
சமீபத்தி கண்டுபிடிக்கப்பட்ட உடு (நட்சத்திரம்) ஒன்று, கடந்த பகுதியில் நான் சொல்லியிருந்ததைச் சரியென உறுதிப்படுத்தியிருக்கிறது. பிக்பாங் நிகழ்வு நடைபெற்று வெறும் 220 மில்லியன் ஆண்டுகளின் பின்னர் உருவாகிய, அதாவது இன்றிலிருந்து 13.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான உடுவொன்றை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவரை கண்டுபிடித்த உடுக்களிலேயே மிகப்பழமையானது இந்த உடுதான். இதன் பெயர் ‘SM0313’. மிகநீண்ட ‘SMSS J031300.36-670839.3’ என்னும் பெயரைச் சுருக்கி, ‘SM0313’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதுவரை நாம் கண்டுபிடித்த உடுக்களிலே தொன்மை வாய்ந்த இந்த உடுவானது எங்கேயிருக்கிறது என்பதைத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அத்தோடு, கடந்த பகுதியின் உண்மையையும் புரிந்துகொள்வீர்கள்.

இந்த உடு எங்கே இருக்கிறது தெரியுமா? நமக்கு வெகு அருகாமையில், எங்கள் பால்வெளி உடுத்திரளிலேயே அது இருக்கிறது. வெறும் 6000
ஒளியாண்டுகள் தூரத்தில். இப்போது புரிகிறதா, பிக்பாங்கிற்கு சற்று அருகில் நடைபெற்ற நட்சத்திர உருவாக்கம், நமது பால்வெளி உடுத்திரளிலேயே இருக்கிறது என்பது?

இனி நாம் ஒரு சிக்கலான விசயத்துக்குள் நுழையலாம். நீங்கள் தயார்தானே!
பேரண்டத்தில் ஒளியை மிஞ்சி எதுவுமே வேகமாகச் செல்ல முடியாது
என்கிறது இயற்பியல். ஆனால், பிக்பாங் பெருவிரிவின்போது வெளியானது, ஒளியைவிட அதிக மடங்கு வேகத்தில் விரிந்தது என்று சொல்வதும் அதே இயற்பியல்தான். அதுமட்டுமில்லாமல், பேரண்டமானது இப்போதும்கூடத் தன்னை ஒளியைவிட அதிக வேகத்தில் விரித்துக் கொண்டே செல்கிறது என்கிறது இயற்பியல். இவை அனைத்துமே, நிரூபிக்கப்பட்ட உண்மைகள். அப்படியெனில் இது எப்படிச் சாத்தியம்? இயற்பியலே தன் கோட்பாடுகளால், தனக்குத் தானே முரண்படுகிறதா? இல்லை, இங்குதான் நாம் ஒரு முக்கிய விசயத்தைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அவற்றை விரிவாக அடுத்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம் என்றாலும், சிறு புரிதலுடன் இந்தப் பகுதியைம் கடக்கலாம். எதை எப்படிப் புரிய வைத்தாலும், உங்களுக்கான கேள்விகள் எப்போதும் எஞ்சி நிற்கும் என்பது எனக்குத் தெரியும். அவற்றின் விளக்கங்களையும் அடுத்த பகுதியில் சேர்த்தே பார்க்கலாம்.இயற்பியல் விதியில் நாம் கவனிக்கத் தவறியது இதுதான். “அண்டத்தினுள்ளே வெற்று வெளியில், ஒளியால் மட்டுமே அதிக வேகத்துடன் பயணிக்க முடியும். அண்டத்தில் இருக்கும் வேறு எதனாலும் ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியாது”. ஒளியால்கூட ஒளியைத் தாண்டிய வேகத்தில் செல்ல முடியாது. ஆனால், இவையெல்லாமே அண்டத்தின் உள்ளே மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் இயற்பியல் விதிகள். இந்த விதிகள், அண்டத்திற்கு வெளியே பயன்பாட்டில் இருக்க மாட்டா. அதாவது, பேரண்ட விரிவின் செயற்பாடு நடைபெறுவது அண்டத்தின் வெளி விளிம்புகளில். அண்டத்தின் உள்ளேயல்ல. அப்டத்தின் வெளியே இயற்பியல் விதிகளுக்கு எப்த வேலைகளும் கிடையாது.
“அட! இதென்ன போங்காட்டம்? அண்டத்துக்கு ‘உள்ளே, வெளியே’ என்று பார்த்திபனின் படம் காட்டுகிறீர்கள்” என்று கேட்கிறீர்களா?சரி, இதைப் பாருங்கள்.
உலகில் அதிக வேகத்தில் மனிதனால் இதுவரை மணிக்கு 35.6 கிமீ வேகத்திலேயே செல்ல முடிந்திருக்கிறது. எந்தவொரு மனிதனாலும் 40 கிமீ வேகத்திற்கு மேல் செல்லவே முடியாது. ஜெர்மனியில் அதிவேகமாகச் செல்லும் தொடருந்து மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. அதன் ஒரு வாகனப் பெட்டியில் நூறு பேர் அமர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நான் ஒரு இயற்பியல் விதி சொல்கிறேன், அது சரியாவெனப் பாருங்கள்.
“இந்தத் தொடருந்துப் பெட்டியிலிருப்பவர்களால் அதிகபட்சமாக மணிக்கு 40 கிமீ மட்டுமே பயணிக்க முடியும். இந்த வேகத்தை இங்கிருக்கும் எவராலும் மிஞ்ச முடியாது!. ஆனால், இந்த மனிதர்கள் அமர்ந்திருக்கும் தொடருந்துப் பெட்டியின் வெளி வேகம், உள்ளிருப்பவர்களின் வேகத்தைவிடப் பல மடங்குகள் அதிகமானது”.
என்ன... புரிகிறதா?

No comments:
Post a Comment