Sunday, 12 January 2020

மரம் - Raj Siva


Raj Siva
July 25, 2019 ·
மரம்


மரம் என்னும் ஒற்றைச் சொல்லை உணர்ச்சியற்று உச்சரிக்கிறான் மனிதன். “என்ன, மரம் மாதிரி நிற்கிறாய்?”. “மரமண்டையா நீ?”. மரத்தை மிகமட்டமாக நினைக்கிறான். தனக்கு ஆறறிவும், மரத்திற்கு ஓரறிவும் இருப்பதாகக் கணிக்கிறான். இவன் கணிப்புகள் தாண்டி, எதையும் சட்டை செய்யாமல் காற்றுடன் விளையாடிக் கலகலவெனச் சிரிக்கிறது மரம். சரி, இது இப்படியே இருக்கட்டும்.


மனிதனுக்கு உணவென்பது எவ்வளவு அடிப்படையானது என்பது உங்களுக்குத் தெரியும். உணவுக்காகவே இயங்குகிறான். உணவைப் பெறும் திசை நோக்கியே வாழ்நாளின் பெரும்பகுதியைக் கடக்கிறான். தனக்கு, தன் குடும்பத்திற்கு, ஒருவேளை உணவைப் பெற்றுக் கொள்வதற்கெனப் பேயாய் அலைகிறான். இணையத்திலும், பேஸ்புக்கிலும் மேயும் நமக்கு அன்றாட உணவுக்காக ஏங்கும்/அலையும் அந்த மனிதர்களைத் தெரியாது. மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு அதிகமானோர் அந்த வகையினர்தான்.


உணவுக்காக அலையும் பிரச்சனை மட்டும் மனிதனுக்கு இல்லையென்றால், இந்த உலகம் எப்படி இயங்குமென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அடிப்படை வசதியற்ற அந்த ஐம்பது சதவீதத்திற்கு அதிகமானோர், எந்தவொரு கூலித் தொழிலுக்கோ, அடிமட்டக் கடினத் தொழிலுக்கோ செல்ல மாட்டார்கள். இருந்த இடத்தில், எதையும் தேடி ஓடாமல், உணவு கிடைத்தால், யாரும் எந்தக் கடின வேலையையும் செய்யமாட்டார்கள். உலகமே முடங்கிப் போய்விடும். குப்பைக் காடாகிவிடும். துபாய் என்னும் நகரத்தில் ஷேக்குகள் மட்டுமே வாழ்ந்து, வேறு எந்தப் பணி செய்பவரும் இல்லையென்றால், அந்த நாடு எப்படி இருக்குமென்று கற்பனை செய்துபாருங்கள்.


அதெல்லாமிருக்கட்டும், இருந்த இடத்தில், எதையும் தேடி ஓடாமல் உணவை எப்படிப் பெறமுடியும் என்கிறீர்களா? அது எப்படிச் சாத்தியப்படும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? அதற்கு, மீண்டும் மரத்துக்கு வாருங்கள்.


தன் உணவுக்காக மரம் எங்கும் ஓடிப் போவதில்லை. எவனுக்கும் அடிமையாகக் கைகட்டிச் சேவகம் செய்ததில்லை. மூட்டை தூக்கியதில்லை. முடி திருத்தியதில்லை. உணவகங்களில் பணியாற்றியதில்லை. இருந்த இடத்தில் இருந்து வானை நோக்கிச் சூரியனைப் பார்த்தாலே போதும். அதன் ஒளியை வாங்கித் தானே உணவைத் தயாரித்துக் கொள்ளும். உபரியாகச் சொற்ப நீர் மட்டுமே. அதையும் வானமே அள்ளிக் கொடுக்கும். தனக்கான உணவைக் கடைகளுக்குச் செல்லாமல், சமைத்தெடுக்காமல், தட்டிப் பறிக்காமல், தானே உருவாக்கிக் கொள்கிறது மரம். சூரிய ஒளியிலிருந்து உணவை உருவாக்குவது மட்டுமில்லாமல், மனிதனுக்கும், விலங்குகளுக்கும், பழமாகவும், கிழங்காகவும், கிளையாகவும் சேர்த்தே உணவைத் தயாரித்தும் வழங்குகிறது.


ஆறறிவு படைத்த மனிதனால் ஏன் சூரிய ஒளிகொண்டு, தன் உணவைத் தானே தயாரிக்க முடியவில்லை? கேள்வி முட்டாள்தனமானதாகத் தெரிகிறதா? பரிணாம வளர்ச்சியில் மரம் தாண்டித்தானே மனிதன் உருவாகினான். புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மனிதனாகினான். அவன் பரம்பரை அலகுகளில் மரம் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எங்கே தொலைத்தான் இந்த அற்புத சக்தியை? ஏன் தொலைத்தான். ஆறறிவைப் பெற அவன் கொடுத்த அநியாய விலையா இது? இதை மட்டும் அவன் தொலைக்காமல் இருந்திருந்தால், எத்தனை பெரிய பாகுபாடுகளுலிருந்து விலகியிருப்பான்? தானே தன் உணவை, எச்சிரமமுமின்றி, இயற்கையிலிருந்து தயார் செய்திருப்பான்.


இப்படி யோசித்துப் பாருங்கள். தன் குழந்தை பசிக்காகக் கதறி அழும்போது, அதன் கைபிடித்து, “அழாதே! வெய்யிலில் போய் நிற்கலாம் வா!” என்று ஒரு தகப்பன் சொல்வது, எத்தனை அற்புதமானது.

No comments:

Post a Comment