Saturday, 25 January 2020

பீடேல்க்யூஸ் (Betelgeuse) என்று ஒரு உடு இருக்கிறது .....

https://www.facebook.com/rajsivalingam/posts/2736101799790163
Raj Siva
11 mins ·
இதைப் படிப்பதால் பைசாப் பிரயோசனம் இல்லை -ராஜ்சிவா(ங்க்)

இந்தத் தகவல் உங்கள் வாழ்க்கையில் எதையும் மாற்றப் போவதில்லை. அவசியானதுமில்லை. அதனால், தெரிந்துதான் ஆகவேண்டியது என்றுமில்லை. ஆனால்,
வானியற்பியலாளர்களின் சில தினங்களைப் புரட்டிப்போட்ட பிரேக்கிங் நியூஸ் இதுதான்.

பீடேல்க்யூஸ் (Betelgeuse) என்று ஒரு உடு இருக்கிறது. அதுதான் வானியற்பியலாளர்களின் இன்றைய சுப்பர்ஸ்டார். தினம் தினம் அவர்களிடையே அதுபற்றியே பேச்சு.

ஓரியன் (அல்லது ஒரியோன் அல்லது ஒரையான் மற்றும் ஆங்கிலத்தில் Orion) என்று சொல்லப்படும் உடுக்கூட்டத்தில் ஒன்றுதான் பீடேல்க்யூஸ் உடு. ஆனால், இப்போது அது நேர்த்தியான உடு அல்ல. அது ஒரு உச்சச் சிவப்பு இராட்சச உடுவாக (super red giant star) மாறியிருக்கிறது.

சூரியனைப்போலப் பலமடங்கு பெரிதாக இருக்கும் உடுவொன்று, தன் ஆற்றலைப் பெரிதும் வெளிப்படுத்திய பின்னர் இறக்கும் நிலைக்கு வருகின்றது. அப்போது, அதன் உள் அழுத்தம் அதிகரித்துப் பெரிதாக விரிவடையத் தொடங்கும். அதனால், வழமையான உருவைவிடப் பல மடங்குகள் ஊதி, இராட்சச உருவத்தை எடுக்கின்றது. அதுவே ஒரு சிவப்பு இராட்சச உடு (red giant star) உருவாவதற்கான படிமுறை. இந்தத் தகவலின் நாயகனான ‘பீடேல்க்யூஸ்’ (Betelgeuse), சாதாரணச் சிவப்பு இராட்சசன் அல்ல. உச்ச இராட்சசன் (super red giant star).

ஒரு சிவப்பு இராட்சச உடு, அதன் உள் அழுத்தத்தால் விரிவடையும் சமயத்தில், அதன் மையக் கருக்கோளத்தின் (core) ஈர்ப்புவிசை அதை உள்ளே இழுக்கத் தொடங்கும். இப்படி ஈர்ப்பு உள்ளே இழுக்கவும், அழுத்தம் வெளியே தள்ளவும், ஒரு நிலையற்ற தன்மை அந்த இராட்சசனுக்கு உருவாகும். அதை வெகுகாலம் தாங்க முடியாமல், என்றோ ஒருநாள் திடீரென வெடித்துச் சிதறும். அப்போதுதான் சுப்பர் நோவா (supernova) உருவாகின்றது. பீடேல்க்யூஸும், ஒருநாள் வெடித்துச் சுப்பர் நோவாவாக மாறக்கூடிய நிலையில்தான் இருக்கிறது. இது வெடிப்பதற்கு இன்னும் ஒரு இலட்சம் ஆண்டுகள்கூட ஆகலாம் என்று நினைத்திருந்தார்கள். அண்டத்தின் வரலாற்றில் ஒரு இலட்சம் ஆண்டு என்பது மிகச்சிறிய காலம்தான்.

பூமிக்க மிகவும் அண்மையாக, 640 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரியோன் உடுக்கூட்டத்தில் (Orion constrllation) உள்ள உடுக்கள், பூமியிலிருந்து பார்க்கும்போது நன்கு ஒளிர்ந்து காணப்படுபவை. அவற்றில் ஒன்றான பீடேல்க்யூஸ் இரவு வானில் தெரியும் பத்துப் பிரகாசமான உடுக்களில் ஒன்றாகும். ஆனால், சமீபத்தில் அதை அவதானித்தபோது, அதன் பிரகாசம் திடீரென மங்கத் தொடங்கியது. அது மங்கிய வேகம் வானியற்பியலாளர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. இது விந்தையானது. நம்பவே முடியாத சில காலத்தில் அது இருபத்தைந்தாவது ஒளிரும் உடுவாக மாறியது. இரவு வானில் பத்தாவது ஒளிரும் பொருள், இருபத்தைந்தாவதாக மாறியது விந்தைதானே! இதுவே, உலகம் முழுவதும் உள்ள இயற்பியலாளர்களை பீடேல்க்யூஸ் பக்கம் அங்கு இங்கு அசைய விடாமல், இன்றுவரை இழுத்து வைத்திருக்கிறது. இந்த உடு மங்குவதால், சீக்கிரமே வெடிக்கப் போவது காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்று தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். அப்படி வெடிப்பதானாலும், அதற்குச் சில ஆயிரம் ஆண்டுகள் எடுக்கலாம் என்ற முடிவில் இருந்தார்கள். அந்த வெடிப்பை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், எதிர்காலச் சந்ததியினர் காணப் போகிறார்களே என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்த மகிழ்ச்சிக்குக் காரணம், பூமிக்கு மிக அருகே உருவாகப் போகும் வெடிப்பும், சுப்பர் நோவா உருவாக்கமும் இதுவாகத்தான் இருக்கும். அத்துடன் அந்த சுப்பர் நோவாவின் பிரகாசம், இரவு வானில் இரண்டாவது ஒளிரும் உடுவின் அளவுக்குத் தெரிய ஆரம்பிக்கும். அந்தப் பிரகாசமான ஒளி பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பூமியில் தெரியும். நம்மால் அதைப் பார்க்க முடியாவிட்டாலும், நம் வருங்கால சந்ததியினர் அந்த ஒளியில் நனையப் போகிறார்கள் என்பது உறுதி.

இந்த வேளையில்தான், அதாவது 2020 ஜனவரி 14ம் திகதி, வழக்கம் போல இல்லாத வித்தியாசமான ‘ஈர்ப்பலைகள்’ (gravitational waves) பூமியை அடைந்ததாக, லைகோ/விர்கோ ( LIGO/VIRGO) அவதானிப்பு நிலையங்கள் அறிவித்தன. ஈர்ப்பலைகளைத் துல்லியமாக அளப்பதற்காக அமைக்கப்பட்ட அவதான நிலையங்கள் அவை. அத்துடன், அந்த ஈர்ப்பலைகள் வந்த திசை, மிகச்சரியாக பீடேல்க்யூஸ் இருக்கும் திசையாக இருந்தது. அப்படியென்றால்....???

பீடேல்க்யூஸ், சுப்பர் நோவாவாக வெடித்துவிட்டதா? அது வெடிக்கும்போது ஏற்பட்ட பேரமுக்கம், அண்டவெளியில் ஏற்படுத்திய சலனமாகி, ஈர்ப்பலைகளாகப் பூமியை வந்தடைந்திருக்கிறதா? அல்லது, அந்த ஈர்ப்பலைகள் வேறு ஏதாவது இரு நியூட்ரோன் உடுக்கள் மோதியதால் உருவானதா? தற்செயலாக இரண்டு திசைகளும் ஒன்றாக இருந்ததா? திகைத்துப் போயிருக்கின்றன வானியல் ஆராய்ச்சி அமைப்புகள்.

லைகோவுக்குக் கிடைத்த ஈர்ப்பலைகள், பீடேல்க்யூஸினுடையதுதான் என்று எடுத்துக் கொண்டால், அது 640 ஆண்டுகளுக்கு முன்னரே வெடித்திருக்க வேண்டும். காரணம், ஈர்ப்பலைகள் ஒளியின் வேகத்தின் பயனித்து, 640 ஒளியாண்டு தூரத்தைக் கடந்து, பூமியை வந்தடைய 640 ஆண்டுகள் தேவை.

நல்லது, இத்துடன் நான் சொல்ல வந்தது முடிந்துவிட்டது. இதைப் படிப்பதை நிறுத்திவிட்டு, உடனே வேறு பதிவுகளைப் படிக்கச் சென்றுவிடுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது, எனக்கும் நல்லது. இதற்கு பின்னரும் படிப்பதைத் தொடர்ந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. என் போக்கில் எதையாவது நான் உளறிவைப்பேன். அது உங்களுக்கு நிச்சயம் நன்மையைத் தராது. அதனால், படிப்பதை நிறுத்திவிட்டுச் சென்று விடுங்கள்.

என்ன தொடர்ந்து படிக்கிறீர்களா? இனி உங்கள் இஷ்டம்.


லைகோவுக்குக் கிடைத்த ஈர்ப்பலைகள், பீடேல்க்யூஸினுடையதுதான் என்று எடுத்துக் கொண்டால், அது 640 ஆண்டுகளுக்கு முன்னரே வெடித்திருக்க வேண்டுமல்லவா? அப்படியெனில், நாமும், நமது மூதாதையர்களும் இதுவரை பார்த்துக் கொண்டிருந்தது, எப்போதோ வெடித்துவிட்ட பீடேல்க்யூஸ் உடுவைத்தானே! இதுபோல, இன்னும் எத்தனை எத்தனை உடுக்கள் வெடித்துச் சிதறித் தற்போது இல்லாமலே போயிருக்குமல்லவா? பீடேல்க்யூஸ் இருக்கும் ஒரியோன் உடுக்கூட்டம், ஜோதிடத்தில் உள்ள ஒரு முக்கிய ராசியாகும். என்றோ இருந்து, தற்சமயம் இல்லாமல்போன உடுக்களால் உருவாக்கப்பட்ட மாய ராசிகளைக் கொண்டு, இன்றையக் காலத்தைக் கணிப்பது சரியானதுதானா? அவற்றால், ஏதும் மாற்றங்கள் உண்டா? இல்லை, ஜோதிடமும் 640 ஒளியாண்டுகளைக் கணக்கு வைத்துக் கொண்டுதான் இயங்குகிறதா?


“என்னவோ போடா ராஜ்சிவா! நீ என்னதான் சொன்னாலும் யாரும் கேட்கப் போவதில்லை. இப்போ பார்! வந்து முரண்டு பிடிப்பார்கள் அங்கு இப்படிச் சொல்லியிருக்கிறது. இங்கு அப்படிச் சொல்லியிருக்கிறது என்று அடம் பிடிப்பார்கள். உன்னால் ஒன்னும் பண்ண முடியாது. போ..! போ..! போய்ப் பேரனைப் படிக்க வை.”

No comments:

Post a Comment